முடிவு

பாரம்பரிய சுற்றுலாத்தலம்

புதுக்கோட்டை மாவட்டம் தொல்லியல் சிறப்பும், பாரம்பரிய பண்பாடும், ,வரலாற்று பெருமையும் உடையது. பாண்டியா்கள், சோழா்கள், பல்லவா்கள், நாயக்கா்கள், இருக்கு வெள்ளியா், முத்தரையா், தொண்டைமான், விஜயநகர மன்னா்கள் மற்றும் ஹோய்சாலா்கள் போன்ற அரச வம்சங்கள் புதுக்கோட்டை பகுதியை ஆட்சிபுரிந்துள்ளன. மன்னா்கள் ஆட்சிக்காலத்தில் பரிமளித்து வந்த இந்த மாவட்டம் அந்த பாரம்பரிய பெருமையை இன்றளவும் குறையாமல் நிலை நாட்டி வருகிறது. அவற்றுள் சில;-

  • பாரம்பரிய கட்டிடங்கள் (எ.கா. மாவட்ட ஆட்சியரக கட்டடிடம், நீதிமன்ற வளாக கட்டிடம்)
  • தொல்லியல் நினைவு சின்னங்கள் (எ.கா. திருமயம் கோட்டை)
  • குகை கோயில்கள் (எ.கா. மலையடிப்பட்டி)
  • ஓவியங்கள் (எ.கா. சித்தனவாசல்)
  • சமண கோயில்கள் ( கன்னங்கார பட்டி, அரிமளம் )
  • கல்வெட்டுக்கள் (எ.கா. குடுமியான்மலை)

அந்த கால பண்பாட்டினையும் வாழ்க்கை முறையையும் தெளிவாக காட்டிடும் காலக் கண்ணாடியாக உள்ளது. தற்போது மாவட்ட ஆட்சியரக வளாகமாக அமைந்துள்ள அரண்மனை தொண்டைமான் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட திராவிடக்கலையும் இந்திய-இத்தாலிய கட்டிட முறையும் கலந்த கட்டிட கலையால் கட்டப்பட்டதாகும். புதுக்கோட்டை மாவட்டத்தின் பழங்கால குறிப்புகள் சில சங்ககால இலக்கியங்களிலே குறிப்பிடப்பட்டுள்ளன. கொடும்பாலூா் பற்றி சிலப்பதிகாரத்தில் சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. நார்த்தாமலை, திருமயம்கோட்டை, குடுமியான்மலை, குன்றாண்டார்கோவில், ஆவுடையார்கோவில் மற்றும் சித்தன்னவாசல் ஆகிய இடங்களிலுள்ள தொல்லியல் துறை நினைவு சின்னங்கள் பழங்கால தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றும் சாட்சிகளாக விளங்குகிறது.