முடிவு

மாவட்ட தொழில் மையம்

இம்மாவட்டத்தில் இயங்கும் அனைத்து குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உரிய சேவைகள் கடன் உதவிகள், மானியங்கள் அனைத்தும் ஒரு குடையின் கீழ் அளிக்கும் தமிழ்நாடு அரசுத்துறை அலுவலகம். இம்மையத்தில் புதிதாக துவங்கப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பதிவு செய்தல் மற்றும் தொழிற்கூட்டுறவு சங்கம் துவங்குவதற்கும் உதவுகிறது.

நிர்வாகம்

இணை இயக்குநர் பதவியில் பொது மேலாளர் அவர்களின் தலைமையில் நிர்வகிக்கப்படுகிறது. பொது மேலாளருக்கு உதவுவதற்கு, மேலாளர்,(கடன்), திட்ட மேலாளர், மேலாளர் (கி.தொ.நி), கண்காணிப்பாளர், உதவி பொறியாளர் மற்றும் அலுவலக பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.

மாவட்ட தொழில் மையம், புதுக்கோட்டை அலுவலகம் மூலம் செயல்படுத்தப்படும் பணிகள்

உத்யோக் ஆதார் பதிவு ( இணையதளவழி)

எம்.எஸ்.எம்.இ.டி. சட்டம் 2008-ன்படி தொழில் நிறுவனங்கள் மற்றும் சேவை நிறுவனங்கள் துவங்க உள்ளவர்களுக்கு உத்யோக் ஆதார் இணையதள வழியாக பதிவு செய்யப்படுகிறது. மேற்கண்ட பதிவு சான்று பெறுவதினால் மின் இணைப்பு, வங்கிக் கடன், இயந்திரங்கள் இறக்குமதி, மற்றும் உரிமங்கள் பெறுதல் போன்ற சலுகைகள் கிடைக்கிறது. மேற்கண்ட சான்று, மத்திய அரசு, மாநில அரசு மானியங்கள் பெறவும், அரசு மற்றும் அரசு சார்நத நிறுவனங்களின் டெண்டர்களில் கலந்து கொள்ளவும், வங்கிகளில் நடைமுறை மூலதனம் பெறவும், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்யவும் பயன் படுகிறது.

குடிசைத் தொழில் பதிவு

இப் பொருள் தொடர்பாக ஒவ்வொரு ஆண்டிற்கும் தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர், சென்னை 5 அவர்கள் மூலம் இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டு களப்பணியாளர்கள் மூலம் இலக்கினை எய்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குறைவான மூலதனத்தில் தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு குடிசைத் தொழில் சான்று வழங்கப்படுகிறது. இச் சான்றின் மூலம் தனது சொந்த தயாரிப்புகளுக்கு உரிமம் எண்ணாக பதிவு செய்து வழங்கப்படுகிறது இச்சான்று பெறுவதினால் குறிப்பிட்ட தொழில்களுக்கு மின் வாரியம் மூலம் மின்சார சலுகை வழங்கப்படுகிறது. குடிசை தொழில் மூலம் பதிவு செய்த நிறுவனங்களுக்கு வங்கிகள் மூலம் தனி நபர் கடன் பெற்று தொழில் செய்து வருகிறார்கள். இத்தொழில் செய்வதினால் வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்

தமிழ்நாடு அரசு, சமுதாயம் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவில் உள்ள நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கவும், படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு உருவாக்கவும், படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தினை தொடங்க அரசாணை 30-07-2010 அன்று வெளியிடப்பட்டு நடைமுறைபடுத்தப்படுகிறது.

  • திட்டத்தின் குறிக்கோள்

படித்த வேலையற்றவர்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிகளில் சுய தொழில் தொடங்கி, உற்பத்தி நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள் மற்றும் வியாபார தொழில் செய்யவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தினால் கிராமப்பகுதிகளிலிருந்து நகர்பகுதிகளில் குடியேறுவதை தவிர்த்தல்

நலிவடைந்த நிலையில் உள்ள நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு வாழ்வாதாரத்தை அமைத்துக்கொடுத்தல் .

சி.ஜி.டி.எம்எஸ்ஈ திட்டத்தின்கீழ் பிணையில்லாமல் கடன் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

  • விதிமுறைகள்

கல்வித் தகுதி:- 8ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு:- மாவட்ட தொழில் மையத்திற்கு விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் தேதி அன்று 18 வயது நிரம்பியவராகவும் முதல் 45 வயது பூா்த்தி அடையாதவராக இருத்தல் வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம்:- ரூ.1,50,000- மிகாமல் இருத்தல் வேண்டும்.
இருப்பிடம்:- விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் அவர் தம் விண்ணப்பிக்கும் பகுதியில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருபவராக இருத்தல் வேண்டும். குடும்ப அட்டைநகல் இணைக்கப்படவேண்டும். குடும்ப அட்டை இல்லாத பட்சத்தில் இருப்பிடச்சான்றிதழ் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருவதற்கு சான்றாக அப்பகுதி தாசில்தாரிடம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
திட்ட கடனுதவி:- வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ.1 இலட்சமும், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.3 இலட்சமும், உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 இலட்சம் வரை வங்கிகள் மூலம் கடன் வசதி பெற வாய்ப்புள்ளது.
விளிம்புத்தொகை:-திட்டத்தொகையில் பொது பிரிவினர்களுக்கு 10 விழுக்காடும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், மகளிர் சிறு பான்மையினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் இராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கையர் ஆகியோர்களுக்கு 5 விழுக்காடு விளிம்புத்தொகை செலுத்த வேண்டும்.

புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத்திட்டம்

தமிழ்நாடு அரசு, படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர்களை உருவாக்குவதற்காக “புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத்திட்டம்” என்ற புதிய திட்டத்தினை அறிவித்துள்ளது. ( NEEDS SCHEME )
இத்திட்டத்தின் கீழ் பட்டம், பட்டயம், ஐ.டி.ஐ. தொழிற் பயிற்சி பெற்றவா்கள் ( தொழிற் பயிற்சி நிறுவனம் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பயிற்சி பெற்றவர்கள்) இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு தொழில் திட்ட அறிக்கை தயாரிக்க பயிற்சி அளித்து வங்கிகள் மூலம் கடனுதவி பெற்று, தொழில் துவங்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.

தகுதிகள்

  • வயது வரம்பு
    பொதுப் பிரிவினர்களுக்கு 21 முதல் 35 வயது வரை, சிறப்பு பிரிவினர்களுக்கு 21 முதல் 45 வயது வரை
  • கல்வித்தகுதி
    பட்டம், பட்டயம், ஐ.டி.ஐ மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பயிற்சி பெற்றவர்கள்.
  • வசிப்பிடம்
    விண்ணப்பதாரர் கடந்த 3 வருடங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து வசிப்பவராக இருத்;தல் வேண்டும்.
  • தகுதியான தொழில்கள்
    அனைத்து உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்கள் ( அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள சில தகுதியற்ற தொழில்கள் தவிர )
  • திட்ட மதிப்பீடு
    குறைந்த பட்சம் ரூ.5.00 இலட்சம் முதல் அதிகபட்சம் ரூ.1.00 கோடி வரை கடனுதவி.
  • மான்யம்
    திட்ட மதிப்பீட்டில் 25 விழுக்காடு அதிகபட்சம் ரூ.25.00 இலட்சம்

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் கொள்கை 2008மானியங்கள்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் 22.2.2008 அன்று வெளியிடப்பட்ட குறு, சிறு மற்றும் நடு;த்தர தொழில் கொள்கை – 2008 மாவட்டத்தின் எப்பகுதியில் துவக்கப்படும் அனைத்து குறு உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் பின் தங்கிய வட்டடாரங்கள், சிட்கோ, சிப்காட் தொழிற்பேட்டைகளில் ஆரம்பிக்கப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கீழ்க்கண்ட மானியங்கள் வழங்கப்படும்.

  • 25% மூலதன மானியம் இயந்திர தளவாடங்களின் மதிப்பில் அதிகபட்சமாக ரூ 30.00 லட்சம் வரை
  • 25 நபர்கள் வேலையில் அமர்த்தும் நிறுவனங்களுக்கு 5% வேலை வாய்ப்பு பெருக்க மானியம் அதிக பட்சமாக ரூ.5.00 லட்சம் வரை
  • 5% மூலதன மானியம் அதிகபட்சமாக ரூ.2.00 லட்சம் வரை – மகளிர் பட்டியல் இனத்தோர், பழங்குடியினர், உடல் ஊனமுற்றோர் மற்றும் அரவாணிகள் தொழில் துவங்கும் பட்சத்தில்
  • 25% மூலதன மானியம் அதிகபட்சமாக ரூ.3.00 லட்சம் வரை – மாசற்ற மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில் நுட்பத்தை பயன் படுத்தும் நிறுவனங்களுக்கு இயந்திர தளவாடங்கள் மதிப்பில் மானியம்.
  • 20% குறைந்த அழுத்த மின் மானியம் முதல் 36 மாதங்களுக்கு
  • முத்திரை தாள் மற்றும் பதிவு கட்டணத்தில் 50% சலுகை.
  • ஜெனரேட்டர் மானியம் 320 கே.வி.ஏ வரை ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட நிறுவனங்களுக்கு 25% மானியம் அதிகப்பட்சம் ரூ.5.00 லட்சம் வரை

தரக் கட்டுபாட்டு சட்டம் அமுல் படுத்துதல்

அரசு அறிவித்துள்ள அரசாணையின்ன படி தரக் கட்டுபாட்டு சட்டம் மூலம் மின் சாதனங்கள் ஐஎஸ்ஐ முத்திரை பெறாமல் விற்பனை செய்யும் வணிகங்களை நேரில் ஆய்வு செய்து அவர்களுக்கு முதலில் ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற மின் சாதன பொருட்களை மட்டுமே விற்பனை செய்யப் பட வேண்டும் என அறிவுரை வழங்கப்படுகிறது. அவ்வாறு ஐ.எஸ்.ஐ முத்திரை பெறாமல் விற்பனை செய்யும் வணிகங்களுக்கு சென்று முத்திரை பெறாத மின் சாதன பொருட்களை பறிமுதல் செய்து அதற்கு அவர்கள் முன்னிலையில் சாட்சியுடன் கையொப்பம் பெற்று நீதி மன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.

ஒரு முனை தீர்வுக் குழுக் கூட்டம்

இவ்வலுவலகம் மூலம் பதிவு பெற்ற நிறுவனங்களுக்கு மின் இணைப்பு வசதி, வரைபடம் ஒப்புதல் பெற, தீயணைப்பு துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தொழிற்சாலை ஆய்வாளர் துறை நகா் ஊரமைப்புத்துறை, சுகாதாரத்துறை மற்றும் இதர துறைகள் மூலம் உரிமம் பெறுவதற்கு இடர்பாடுகள் இருந்தால் இப் பொருளினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் மாதந்தோறும் நடைபெறும் ஒரு முனை தீர்வுக் குழுக் கூட்டத்தின மூலம் உடனடியாக தீர்வு செய்து நிறுவனம் தொழில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அம்மா திறன் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தேவைப்படும் மனித ஆற்றலை வழங்கிடும் நோக்கில் “அம்மா திறன் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்” என்ற திட்டத்தினை செயல்படுத்த ஆணையிடப்பட்டுள்ளது. மேற்கண்ட திட்டத்தின் கீழ் 18 முதல் 25 வயது வரையிலான பொறியியல் தொழில் கல்வியியல் (ஐ.டி.ஐ) மற்றும் தொழில் பட்டய படிப்பு (டிப்ளமோ) தேர்ச்சி பெற்ற வேலையில்லா இளைஞர்களுக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய 6 மாத கால பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 5000/- உதவித் தொகையும், தேசிய திறன் மேம்பாட்டு கழக சான்றிதழும், பயிற்சி வழங்கிய நிறுவனங்களிலேயே வேலைவாய்ப்பும் வழங்கப்படும்.

ஊக்குவிப்பு முகாம் நடத்துதல்

ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களிலும் இவ்வலுவலகம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மானியசலுகைகள் மற்றும் இதர சலுகைகள் பற்றிய விளக்கங்களை கையேடு மூலம் அறிவிக்கப்பட்டு வருகிறது.

ஏற்றுமதி வழிகாட்டும் பிரிவு

ஏற்றுமதி வழி காட்டும் பிரிவின் மூலம் புதியதாக ஏற்றுமதி தொழில் செய்யும் முனைவோர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

எரிசக்தி கணக்கீடு மற்றும் எரிசக்தி ஆற்றல் பாதுகாப்பு

எரிசக்தி கணக்கீடு ஒவ்வொரு தொழிற்சாலைகளிலும் எவ்வாறு மேற்கொள்வது குறித்தும், எரிசக்தி கணக்கீடு செய்யும் உற்பத்தி தொழிற் நிறுவனங்களுக்கு 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் மானியம் வழங்கப்படும். எரிசக்தி கணக்கீட்டின் மூலம் பரிந்துரை செய்யப்படும் இயந்திரங்கள், தளவாடங்கள் மற்றும் அதற்குரிய சாதனங்களை பயன்படுத்த 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 2 இலட்சம் மானியம் வழங்கப்படும்.

தொடர்பு முகவரி
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
புதுக்கோட்டை.
04322 221794