முடிவு

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம்

உழவர் சந்தைகள்

உழவர்கள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை இடை தரகர்களின்றி நேரடியாக விற்பனை செய்யவும், நுகர்வோர்கள் தினந்தோறும்புத்தம் புதிய காய்கறிகளை வாங்கிடவும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 இடங்களில் உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி, கந்தர்வகோட்டை, கறம்பக்குடி மற்றும் விராலிமலை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் காய்கறிகள் மற்றும் பழங்களை உழவர் சந்தையில் விற்பனை செய்ய வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) அவர்களிடமிருந்து அடையாள அட்டை பெற்று விற்பனை செய்யலாம். நுகர்வோர்கள் மனநிறைவோடு உரிய விலையில் புதிய காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள்

உழவர்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை அரசு நிர்ணயம் செய்த விலைக்கு (MSP) குறையாமல் விற்கவும், வாங்கவும் அமைக்கப்பட்டது. பொருளீட்டுக் கடன் – விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு வழங்கப்படுகின்றது. அதிகபட்சமாக ரூ.3.0 லட்சம் விவசாயிகளுக்கும், ரூ.2.0 லட்சம் வியாபாரிகளுக்கும் வழங்கப்படுகிறது. மேலும், வட்டித் தொகை 5 சதவீதம் விவசாயிகளுக்கும், 9 சதவீதம் வியாபாரிகளுக்கும் வழங்கப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, ஆலங்குடி, கந்தர்வகோட்டை, கீரமங்கலம், அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், பொன்னமராவதி, இலுப்புர் மற்றும் கறம்பக்குடியில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைந்துள்ளது.

நவீன குளிர்பதனக் கிடங்கு

விவசாயிகள் விரைவில் கெட்டுப்போகும் தன்மையுடைய தங்கள் விளைபொருட்களை அதிகமாக உற்பத்தி செய்யும் காலங்களில் குளிர்பதனக் கிடங்குகளில் சேமித்து வைத்து, பின்னர் நல்ல விலை வரும் காலங்களில் விற்பனை செய்யவும், நுகர்வோருக்கு அனைத்து காலங்களிலும் தரமான விளைபொருட்கள் கிடைப்பதற்காகவும் அமைக்கப்பட்டது. இலுப்புரில் 100 மெ.டன்னும், ஆலங்குடியில் 25 மெ.டன் கொள்ள்ளவுடனும் குளிர்பதனக் கிடங்குகள் உள்ளன.

கூட்டுப்பண்ணையத் திட்டம்

புதுக்கோட்டையில் 100 விவசாயிகளை உறுப்பினராகக் கொண்ட 97 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் கூட்டுப் பண்ணையத் திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து 1000 உறுப்பினர்களைக் கொண்ட 3 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அமைக்கப்பட உள்ளன.

நீடித்த மானாவாரி வேளாண்மை இயக்கம் (MSDA)

மானாவாரி பயிர் சாகுபடி விவசாயிகளை ஒன்றிணைத்து 1000 எக்டர் கொண்ட ஒரு தொகுப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இவர்களை ஒன்றிணைத்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைக்கவும், விளைபொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய மதிப்புக் கூட்டும் இயந்திரங்களையும் மானித்தில் வழங்கப்படவும் உள்ளன.

நீர்வள நிலவளத் திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகள்

  • வேளாண் விற்பனை மையங்கள் – 3 எண்கள் (திருவரங்குளம், திருநாளுர் மற்றும் ஏம்பல்)
  • சேமிப்பு கிடங்குகள் 21 எண்கள்.
  • உலர்களங்கள் – 53 எண்கள்.
  • சேகரிப்பு மையம் (Collective Centre) – 1 எண் (மேலாத்தூர்)

உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்

3 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் நம் மாவட்டத்தில் (TNSFAC) தமிழ்நாடு சிறு விவசாயிகள் வேளாண் வணிக கூட்டமைப்பின் உதவியோடு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றன. (1) புதுக்கோட்டை இயற்கை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம், புதுக்கோட்டை (2) இலுப்புர் விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் (3) புதுக்கோட்டை தென்னை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம், அறந்தாங்கி.

தென்னை வணிக வளாகம்

அறந்தாங்கியில் NABARD – RIDF நிதி உதவியுடன் தென்னை வணிக வளாகம் ரூ.3.0 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதில் 10 கடைகள், 2 சேமிப்பு கிடங்குகள், 2 உலர்களங்கள், சூரிய ஒளி மூலம் கொப்பரை காயவைப்பான் ஆகிய தென்னை விவசாயிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.

வேளாண் விற்பனைத்துறை

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையில் விவசாயிகளுக்கு தேவையான அறுவடை பின்செய் நேர்த்தி வழிமுறைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவை செய்து தரப்படுகின்றன. வேளாண் விளைபொருள் விலைகள் குறித்த விபரங்கள் Agmark.net என்ற வலைதளத்திலும், உழவன் கிசான் சுவிதா மற்றும் கிரீன் தம்ப் போன்ற செயலிகள் மூலமும் வெளியிடப்படுகின்றன. மேலும், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை தரம் பிரித்தல், விற்பனை செய்தல், மதிப்பு கூட்டுதல் மற்றும் பதப்படுத்துதல் போன்றவற்றை மேற்கொள்ள பயிற்சிகள், விளம்பரங்கள் போன்றவை செய்யப்படுகின்றன.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
வேளாண்மை துணை இயக்குநர் (வேவ)
புதுக்கோட்டை
04322-221688