விதைச்சான்றளிப்பு மற்றும் அங்ககச் சான்றளிப்பு துறை
அறிமுகம்
இந்திய பொருளாதாரம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது அனைவரும் அறிந்ததே. விவசாயம் சிறப்பாக இருக்க வேண்டுமானால் இடுபெருட்கள் தரமானதாக, உரிய நேரத்தில் தேவைப்படும் அளவு விவசாயிகளுக்கு கிடைத்தால் மட்டுமே சாத்தியம். விதை என்ற அடிப்படை இடுபொருளை தேர்ந்தெடுக்கும்போது சிறிது கவனக்குறைவு ஏற்பட்டாலும் மொத்த விளைச்சலும் பாதிக்கப்படும். தரமான விதைகள் விவசாய பெருமக்களுக்கு கிடைக்கச் செய்யும் நோக்கத்துடன் கோவையை தலைமையிடமாகக் கொண்டு விதைச் சான்றளிப்புத்துறை செயல்பட்டு வருகிறது.
விதைச்சான்றளிப்பு மற்றும் அங்ககச் சான்றளிப்புத்துறை விதைச்சான்று, விதைச்சட்ட அமலாக்கம், விதைப்பரிசோதனை, விதைச்சான்று பயிற்சி, அங்ககச் சான்றளிப்பு ஆகிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
சான்று விதைகளை விதைப்புக்கு பயன்படுத்துவதன் மூலம் நல்ல முளைப்புத்திறன், தேவையான பயிர் எண்ணிக்கை, சீரான வளர்ச்சி கிடைப்பதுடன் ஒரே நேரத்தில் அறுவடையும் செய்யலாம்.
விதைச்சான்றளிப்பு பிரிவு
புதுக்கோட்டை மாவட்டத்தில் விதைச்சான்று உதவி இயக்குநர் கட்டுப்பாட்டில் புதுக்கோட்டை, அறந்தாங்கி மற்றும் குடுமியான்மலை ஆகிய தலைமையிடங்களில் மூன்று விதைச்சான்று அலுவலர்கள் பணியிடங்கள் உள்ளன. விதைச்சான்று உதவி இயக்குநர் மற்றும் விதைச்சான்று அலுவலர்களின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையில் அரசு மற்றும் தனியார் விதை உற்பத்தியாளர்கள் மூலம் நல்ல தரமான விதைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட விதைப்பண்ணைகள் பல நிலைகளில் விதைச்சான்று அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு வயல்தரம் மற்றும் விதைத்தரங்களில் தேறியிருந்தால் அறுவடை செய்ய அனுமதிக்கப்பட்டு விதைச்சுத்திகரிப்பு செய்து விதை மாதிரி எடுத்து ஆய்விற்கு அனுப்பி பகுப்பாய்வில் தேறியிந்தால் அவ்விதைக்குவியல்களுக்கு சான்றட்டை பொருத்தப்படுகிறது.
விதைச்சட்ட அமலாக்கப் பிரிவு
மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட விதைகள் சட்டம் 1966, விதைகள் விதிகள் 1968, விதைகள் மற்றும் சுற்று சூழல் திட்டம் 1986 ஆகிய விதைச்சட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் படி விதை விற்பனைக்கு உரிமம் வழங்கப்படுகிறது. இது தவிர விதை ஆய்வாளர்களால் விதை விற்பனை நிலையங்கள் ஆய்வு செய்யப்பட்டு விதைக்குவியல்களில மாதிரிகள் எடுக்கப்பட்டு தரப்பரிசோதனைக்கு விதைப்பரிசோதனை நிலையங்களுக்கு அனுப்பப்படுகிறது. பரிசோதனை செய்யப்பட்ட மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட தரங்களில் தேறாத குவியல்களுக்கு விற்பனை தடைசெய்யப்பட்டு தரமற்ற விதைகள் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படுவதுடன் தரமற்ற விதைகளை உற்பத்தி செய்தவர் மற்றும் விதை விற்பனை செய்தவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
விதைப்பரிசோதனை நிலையம்
விதைச்சான்று மற்றும் விதைச்சட்ட அமலாக்க பிரிவு மூலம் அனுப்பபடும் விதை மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுகின்றன. விதைச்சான்று மாதிரிகளுக்கு ஈரப்பதம், புறந்தூய்மை, முளைப்புத்திறன், பிற இரக கலப்பு போன்ற பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. விதைச்சட்ட அமலாக்க மாதிரிகளுக்கு புறந்தூய்மை மற்றும் முளைப்புத்திறன் பரிசோதனை செய்யப்படுகிறது. இது தவிர விவசாயிகள், விதை உற்பத்தியாளர்கள் நேரடியாக கொடுக்கும் பணி விதை மாதிரிகளும் பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்கு கட்டணமாக ரூ.30/- செலுத்த வேண்டும்.