மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை
ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மைத் திட்டம்
மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் மூலம் ஒருங்கிணைந்த மேலாண்மைத்திட்டம் இம்மாவட்டத்தில் கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, திருவரங்குளம், கறம்பக்குடி, அரிமளம், அன்னவாசல் மற்றும் குண்ணான்டார்கோவில் ஆகிய 7 வட்டாரங்களில் உள்ள 97 நீர்வடிப்பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 5 வட்டாரங்களில் திட்டப்பணிகள் அனைத்தும் முடிவுற்றது. மீதமுள்ள 2 வட்டாரங்களில் 50 நீர்வடிப்பகுதிகளில் இத்திட்டம் செயலாக்கத்தில் உள்ளது.
திட்ட காலம் 5 ஆண்டுகளும், ஒருங்கிணைப்பு காலம் 2 ஆண்டுகளும் ஆக மொத்தம் 7 ஆண்டுகள் ஆகும். இத்திட்டத்திற்கு மத்திய அரசின் பங்களிப்பு 60 சதவீதமாகவும், மாநில அரசின் பங்களிப்பு 40 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இத்திட்டத்தில் ஒரு எக்டர் பரப்பளவை மேம்படுத்த ரூ.12000/- நிதி ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது சீர்கேடு அடைந்த இயற்கை வளங்களான மண், பசுமைச்சூழல் மற்றும் நீர் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, பாதுகாத்து, மேம்படுத்தி சுற்றுச்சூழல் சமநிலையை மீட்டெடுத்தல் ஆகும். இத்திட்டத்தின் மூலம் மண் அரிப்பை தடுத்து இயற்கை பசுமைச் சூழலை மீட்டெடுத்து, மழைநீரை சேமித்து நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தப்படுகிறது. இத்திட்டத்தின் வாயிலாக கீழ்க்கண்ட இன்றியமையாத பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நுழைவுக்கட்டப்பணிகள்
நுழைவுக் கட்டப்பணியின் கீழ் நீர்வடிப்பகுதிகளில் தேவைப்படும்
இன்றியமையாத பணிகளான சிறுமின்விசை பம்பு, ஆழ்குழாய் கிணறுடன் கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, உலர்களங்கள், தடுப்புச்சுவர், சிறுபாலம் மற்றும் ஊரணி படித்துறை அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இயற்கை வள மேம்பாட்டுப் பணிகள்
நீர்வடிப்பகுதிகளில் நிலம் மற்றும் நீர்வள மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நீர்வடிப்பகுதிகளில் பண்ணைக்குட்டைகள் அமைத்தல், தடுப்பணைகள் கட்டுதல், புதிய ஊரணிகள் அமைத்தல், வாரி மற்றும் குளங்கள் தூர்வாருதல், கசிவு நீர்க்குட்டை அமைத்தல், கால்நடை குட்டை அமைத்தல், நீர்செறிவூட்டும் அமைப்பு ஏற்படுத்துதல், பாழும் கிணற்றை புனரமைத்தல், கோடை உழவு செய்தல் மற்றும் சமதள வரப்பு அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பண்ணை வள மேம்பாட்டு பணிகள்
நீர்வடிப்பகுதிகளில் உள்ள பயனாளிகளுக்கு பழ மற்றும்
மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. பயிர் செயல்விளக்கங்கள், தீவனப்பயிர் அபிவிருத்தி பணிகள், வேளாண் மற்றும் வேளாண் சார் தொழில் உபகரணங்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு பணிகள் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன.
வாழ்வாதாரப் பணிகள்
நீர்வடிப்பகுதியிலுள்ள சுயஉதவிக்கழுக்களுக்கு சுழல்நிதி வழங்குதல்
மற்றும் சுயதொழில் செய்வதற்கான உபகரணங்கள் வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சமுதாய அமைப்பு மற்றும் பயிற்சி
நீர்வடிப்பகுதியிலுள்ள சுயஉதவிக்குழுக்கள் மற்றும் பயனாளி குழுக்களுக்கு சுயதொழில் செய்வதற்கான பயிற்சியளித்தல் மற்றும் நீர்வடிப்பகுதி தலைவர்கள் மற்றும் செயலாளர்களை பட்டறிவு பயணமாக வெளி மாவட்டங்களில் உள்ள மாதிரி நீர்வடிப்பகுதிகளை காண்பிப்பதற்கு அழைத்துச் செல்லுதல் போன்ற பணிகளும் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.