முடிவு

வேளாண்மைப் பொறியியல்

அறிமுகம்

வேளாண்மைப் பொறியியல் துறை புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண் வளர்ச்சிக்கான இயற்கை வளங்களை மேம்படுத்துவதற்கான தனது சேவையை 1974-ம் ஆண்டு முதல் முனைப்போடு ஆற்றி வருகிறது.

தற்போது புதுக்கோட்டை அறந்தாங்கி மற்றும் இலுப்பூர் வருவாய் கோட்டங்களில் இரண்டு உபகோட்டங்கள் மற்றும் மாவட்ட அளவில் கோட்ட அலுவலகத்தையும் கொண்டு சுமார் 22 பொறியாளர்கள் தொழில் நுட்ப அலுவலர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு சேவை அளிக்கும் துறையாக தனது பங்கை ஆற்றி வருகிறது.

இயற்கை வளங்களான மண் மற்றும் நீர் ஆதாரங்களை பேணி பாதுகாப்பதற்கும் சரியாகவும், முறையாகவும், சிக்கனமாகவும் இவ்வளங்களை பயன்படுத்தும் முறைகளை தொழில்நுட்ப ரீதியில் செயல்படுத்தவும் உரிய திட்டங்களை ஆக்கபூர்வமாக செயல்படுத்துவதுடன் உரிய ஆலோசனைகளை விவசாயப் பெருமக்களுக்கு வழங்கி வருகிறது.

நில மேம்பாட்டுத்திட்ட இயந்திரங்கள்

நிலம் சமன்படுத்துதல், சீரமைத்தல் மற்றும் உழவுப் பணிகளை விவசாயிகள் மேற்கொள்ள, நிலமேம்பாட்டுத்திட்ட இயந்திரங்களான புல்டோசர்கள், (வாடகை Rs.840/- ஒரு மணிக்கு) டிராக்டர்கள் (வாடகை Rs.340/- ஒரு மணிக்கு) அரசு நிர்ணயித்த குறைந்த வாடகையில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கி வருகின்றன. வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளுக்காகவும் மேற்காணும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சிறுபாசனத்திட்ட இயந்திரங்கள்

புதிய ஆழ்துளை குழாய் கிணறுகள் அமைத்தல் பணிகளை மேற்கொள்ள சுழல்விசைத் துளைக் கருவிகள், விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்படுகின்றன. (வாடகை Rs. 130/- ஒரு மீட்டருக்கு)

நிலத்தடி நீர் இருப்பையும், கிணறு அமைப்பதற்கு ஏற்ற இடத்தையும் கண்டுபிடித்திடும் பொருட்டு நிலத்தடி நீர் ஆய்வுக் கருவி விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்படுகின்றன. (விவசாயப்பணி க்கு ஒரு ஆய்வுக்கு Rs.500/-, விவசாயம் அல்லாத பணி ஒரு ஆய்வுக்கு வாடகை Rs. 1000/-)

வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டம் ( NADP,SMAM )

(தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்டம்/ வேளாண்மை இயந்திரமயமாக்கல் துணை இயக்கம்)

வேளாண்மையில் இயந்திரங்களை பிரபலப்படுத்துவதன் முலம் கூடுதலாக பண்ணை சக்தியை வழங்கிடவும், வேளாண் தொழிலாளர்கள் பற்றாக்குறையை ஈடு செய்யவும், வேளாண் பணிகளை உரிய காலத்தில் முடித்திடவும், வேளாண் உற்பத்தியை பெருக்கிடவும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்கு தேவைப்படும் நவீன ரக வேளாண் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை மானியம் அல்லது நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச மானியத்தில் வேளாண்மை இயந்திரமயமாக்கல் துணை இயக்கம் (SMAM) வழிகாட்டு நெறிமுறைகளின்படி வழங்கப்படுகிறது

வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கும் சேவை மையங்கள் வட்டார அளவிலும், கிராம அளவிலும் அமைக்கப்பட்டு வருகிறது. வட்டார அளவில் வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கும் சேவை மையங்கள் அமைக்க 40 சதவீத மானியமும், கிராம அளவில் வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கும் சேவை மையங்கள் அமைக்க 80 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது.

நீடித்த வேளாண்மைக்கான தேசிய இயக்கம்

மழைநீர் சேகரிப்பு மற்றும் மழைநீர் மேலாண்மை பணிகள்

நீர் வடிப்பகுதிகளில் மண்ணின் ஈரத்தன்மையை மேம்படுத்தி அதிக பரப்பில் விவசாயம் மேற்கொள்ளும் பொருட்டு, தடுப்பணைகள், கசிவுநீர் குட்டைகள், பண்ணைக் குட்டைகள், புதிய கிராமக் குளங்கள், ஊரணிகள் மற்றும் செறிவூட்டும் குழாய் கிணறுகள் போன்ற மழைநீர் சேகரிப்பு மற்றும் மழைநீர் மேலாண்மைக் கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள்

சூரிய சக்தியால் இயங்கும் 5 குதிரைத்திறன் முதல் 10 குதிரைத்திறன் கொண்ட ஏ.சி.பம்பு செட்டு அமைப்புகள் 90 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கி நிறுவப்பட்டு வருகின்றன. வேளாண்மைப் பொறியியல் துறை மற்றும் தமிழ்நாடு எரிசக்தித்துறை இணைந்து தமிழக அரசின் 40 சதவீத மானியம், மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசத்தி துறையின் 20 சதவீத மானியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் 30 சதவீத மானியம் ஆக மொத்தம் 90 சதவீத மானியம் மற்றும் விவசாயிகளின் பங்களிப்பு 10 சதவீதம் என்ற அடிப்படையில் வழங்கி நிறுவப்படுகிறது. டெல்டா பகுதியில் உள்ள நிலத்தடி நீரை பயன்படுத்துவதற்கு சூரிய சக்தி மோட்டார் பம்பு செட்டுகளை ஊக்குவிக்கும் வகையிலும், மாவட்டத்தின் அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையிலும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பதிவு செய்த விவசாயிகள் தங்கள் விண்ணப்பத்தை திரும்பப் பெற முன்வந்தால் 90 சதவீத மானியம் வழங்கப்படும்.

பண்ணைக்குட்டைகள் அமைக்கும் திட்டம்

காவேரி டெல்டா பாசனப் பகுதிகளிலும், கடலோர கிராமங்களில் உள்ள விளைநிலங்களில் கடல்நீர் உட்புகா வண்ணம் தடுக்கும் பொருட்டும், நிலத்தடி நீரை பாதுகாக்கும் பொருட்டும், அறுவடை காலத்தில் ஏற்படும் பாசன நீர் பற்றாக்குறையை சரிகட்டும் பொருட்டும் பண்ணைக் குட்டைகள் Rs.1.00 இலட்சம் மதிப்பீட்டில் விவசாயிகளின் சொந்த பட்டா நிலங்களில் அமைத்து தரப்படுகின்றன.

நீடித்த மானாவாரி விவசாயிகளுக்கான இயக்கம் (MSDA)

மானாவாரி சாகுபடியினை மேம்படுத்துவதற்கு தமிழக அரசு நீடித்த மானாவாரி விவசாயிகளுக்கான இயக்கம் என்ற திட்டம் 2016-17 முதல் 2019-2010 வரை 4 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தலா 1000 எக்டேர் பரப்பு கொண்ட 12 தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டு, முதல்கட்டமாக விராலிமலை, குன்றாண்டார்கோவில், பொன்னமராவதி, அன்னவாசல் ஆகிய 4 தொகுப்புகளிலும், இரண்டாம் கட்டமாக, புதுக்கோட்டை, திருவரங்குளம், குன்றாண்டார்கோவில், கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி, அரிமளம், திருமயம், அறந்தாங்கி ஆகிய 8 தொகுப்புகளிலும் செயலாக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு தொகுப்புக்கும் நுழைவு கட்டப் பணிகளாக சமுதாய நிலங்களில் மழைநீர் சேகரிப்பு பணிகளுக்கு 5.00 இலட்சமும், உழவுப் பணிகளுக்கு Rs.1250/- (ஒரு எக்டேருக்கு) வீதம் Rs.12.50 இலட்சமும், மழைநீர் அறுவடை பண்ணைக் குட்டைகள் மற்றும் வரப்புகள் அமைத்தல் பணிகளுக்கு ஒரு தொகுப்புக்கு Rs.7.50 இலட்சம் வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் விவசாயக் குழுக்களுக்கு வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்கள் அமைத்திட 80 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.

வேளாண் விளை பொருட்களை மதிப்புக்கூட்டி, சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்து அதிக இலாபம் பெறும் வகையில் மதிப்புக் கூட்டும் இயந்திரமையங்கள் அமைத்திட 75 சதவீத மானியத்தில் அதிகபட்சமாக Rs.10 இலட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

சூரிய சக்தியால் இயங்கும் உலர்ப்பான்கள் (Solar Drier)

வேளாண் விளை பொருட்களை உலர்த்தி அதனை மதிப்புக் கூட்டும் பொருட்களாக மாற்றி கூடுதல் வருமானம் பெறும் வகையில் சூரிய மின்சக்தி உலர்ப்பான்கள் 50 சதவீத மானியத்தில் சுமார் 400 சதுரஅடிபரப்பளவில் அமைக்கப்படுகின்றன.

மேலும் திட்டங்கள் பற்றிய தகவல் அறியவும், பயன்பெற பதிவு செய்யவும் ‘உழவன்”; ‘UZHAVAN” APP கைபேசி செயலியை பதிவிறக்கம் செய்து பயன் பெறலாம்.

மேலும் தகவல் அறிய
செயற் பொறியாளர் உதவி செயற் பொறியாளர், புதுக்கோட்டை உதவி செயற் பொறியாளர், அறந்தாங்கி
செயற் பொறியாளர் (வே.பொ)
வேளாண்மைப் பொறியியல் துறை
எண்.81 காட்டுப் புதுக்குளம் ரோடு
வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம்
2ம் தளம், புதுக்கோட்டை- 622 001.
தொலைபேசி எண் 04322 221816
இ மெயில் முகவரி: aedeepdk[at]tn[dot]nic
உதவி செயற் பொறியாளர் (வே.பொ)
வேளாண்மைப் பொறியியல் துறை
எண்.1425/சி திருச்சி மெயின் ரோடு
நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் அருகில்
திருக்கோகர்ணம் அஞ்சல்
புதுக்கோட்டை- 622 002
உதவி செயற் பொறியாளர் (வே.பொ)
வேளாண்மைப் பொறியியல் துறை
எண்.122 ரங்கோஜி பாவாத்தெரு
அக்ரஉறாரம்
அறந்தாங்கி – 614 616.