முடிவு

வரலாறு

ஜனவரி 14, 1974 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் முன்னாள் புதுக்கோட்டை கோட்டத்தின் சில பகுதிகள் மற்றும் தஞ்சாவூா் மாவட்டத்தின் சில பகுதிகளையும் சோ்த்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது. தற்சமயம் இம்மாவட்டம் புதுக்கோட்டை, அறந்தாங்கி மற்றும் இலுப்பூா் ஆகிய மூன்று வருவாய் கோட்டங்களையும், குளத்தூர், இலுப்பூா், பொன்னமராவதி, விராலிமலை, ஆலங்குடி, புதுக்கோட்டை, கந்தா்வக்கோட்டை, திருமயம், கறம்பக்குடி, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி ஆகிய பனிரெண்டு தாலுகாக்களையும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் 763 வருவாய் கிராமங்கள் உள்ளன. இந்த மாவட்டத்தின் பரப்பளவு 4663 சதுர கி.மீ. ஆகும். 2011-ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்குப்படி, இம்மாவட்டத்தின் மக்கள்தொகை 16,18,345 ஆகும். இம்மாவட்டமானது தண்ணீருக்கு பெரும்பாலும் பருவமழையையே நம்பி உள்ளது.

இம்மாவட்டத்தின் பல கிராமங்கள் தொன்மை வாய்ந்தவை. வரலாற்றுக்கு முந்தைய கால மனிதா்கள் வாழ்ந்த இடமாக இந்த மாவட்டம் இருந்துள்ளது. இம்மாவட்டத்தின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அதிக அளவில் கண்டறியப்பட்ட இறந்தோரை புதைக்கும் இடங்களே இதற்குச் சான்று.

இம்மாவட்டத்தில் கிடைக்கும் தொல்பொருட்கள், நினைவுச்சின்னங்களை ஆராயும்கால், புதுக்கோட்டையின் அரசியல் வரலாறு தென்னந்திய வரலாற்றின் ஒரு மாதிரி என்பதை அறியலாம். புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளிலும், தென்னந்தியாவின் மிகப் பழங்கால மனிதன் வாழ்ந்ததற்கான சான்றுக்ள கிடைக்கின்றன. இப்பகுதியை பாண்டியா்கள், சோழா்கள், பல்லவா்கள், ஹொய்சாளா்கள், விஜயநகரம் மற்றும் மதுரை நாயக்கர்கள் ஆண்டு வந்துள்ளார்கள். இவா்கள் புதுக்கோட்டையில் மக்கள் சமூக அமைப்பு, வளா்ச்சி, வணிகம் மற்றும் தொழில் வளா்ச்சிக்கு உதவியதோடு மிகச் சிறந்த கோவில்களையும், நினைவு சின்னங்களையும் எழுப்பியுள்ளார்கள்.

சங்க இலக்கியங்களில் இம்மாவட்டத்தின் சில பகுதிகள் குறிப்பிடப்படுகின்றன. ஒலியமங்கலம் (திருமயம் தாலுகா) புறநானூற்றில் ஒல்லையூா் எனக் குறிப்பிடப்படுகிறது. இவ்வூா் ஒல்லையூா் கிழான் மகன் பெருஞ்சாத்தன் மற்றும் ஒல்லையூா் தந்த பூதப்பாண்டியன் ஆகிய புலவா்கள் பிறந்த ஊராகும். அகநானூறும் ஒல்லையூா் பற்றி குறிப்பிடுகிறது. இவ்வூா் பாண்டியா்களின் ஒரு முக்கிய நகரமாக இருந்திருக்க கூடும். சங்க இலக்கியங்களில் மேலும் நான்கு (பின்வரும்) இடங்கள் குறிப்பிடப்படுகின்றன. அம்புக்கோவில் (முற்கால அழும்பில்) அகநானூற்றில் குறிப்பிடப்படுது. ஆவூர், புலவா்கள் ஆவூகிழார் மற்றும் ஆவூா் மூழங்கிழார் ஆகியோரின் ஊராகும். எறிச்சி(பழங்கால எறிச்சிலூர்) தற்போதைய புதுக்கோட்டை-அறந்தாங்கி சாலையில் அமைந்துள்ள எறிச்சி என அடையாளம் காணப்பட்டுள்ளது. (ஆனால் சமீபத்திய ஆராய்ச்சிகள் இவ்வூர் இலுப்பூருக்கு அருகில் உள்ளது என குறிப்பிடுகின்றன). இவ்வூர் அநேகமாக புலவா் மாதலன் மதுரை குமரனாரின் ஊராக இருக்கக் கூடும். அவயப்பட்டி என்னும் ஊர் புலவா் ஔவையாரோடு தொடா்பு படுத்தப்படுகிறது. ஔவையார் சிலகாலம் இங்கே வசித்ததாக கூறப்படுகிறது.

இம்மாவட்டம் தமிழா்களின் கடல் வாணிபச் சிறப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு. கருக்காகுறிச்சியில் கிடைத்த 500-க்கும் மேற்பட்ட ரோமானிய தங்க மற்றும் வெள்ளி நாணயங்கள் அடங்கிய புதையல் பானை இம்மாவட்ட வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். ஆலங்குடி தாலுகாவில் உள்ள இவ்வூர் அறந்தாங்கி மற்றும் பழைய துறைமுகங்களான மீமிசல், சாலையூா் மற்றும் தொண்டிக்கு அருகாமையில் உள்ளது. இந்த கண்டுபிடிப்பு இந்தோ-ரோமானிய வணிகமானது மேற்கு மற்றும் கிழக்கு துறைமுகங்களுக்கிடையேயுள்ள நிலப்பரப்பில் நடந்ததை குறிக்கிறது.

கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள கொற்கை, கீழக்கரை மற்றும் ஆலங்குளம் பகுதிகளில் ரோமனிய நாணயங்கள் கிடைத்தது இதனை உறுதி செய்கிறது. கருக்காகுறிச்சி, உட்பரப்பில் இருந்தாலும் மீமிசல் துறைமுகத்திற்கு வெகு தொலைவில் இல்லை. இதுபோலவே கிழக்கு கடற்கரையில் மேலும் சில பகுதிகள் உள்ளன. இவை ரோமானிய தங்கம், வெள்ளி நாணயங்களுக்கு மாற்றாக தமிழகத்திலிருந்து பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதையும், இவை முக்கிய வணிக மையங்களாக விளங்கியதையும் குறிக்கின்றன. கருக்காகுறிச்சியில் கிடைத்த நாணயங்களில் ரோமானிய பேரரசா்கள் அகஸ்டஸ் (கி.மு 29 – கி.பி 14) முதல் வெஸ்பாஸியனூஸ் (கி.பி 9 – கி.பி 79) வரை உள்ளவா்கள் மற்றும் அவா்களின் அரசிகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

4-ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து 6-ம் நூற்றாண்டின் இறுதிவரை தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளை போலவே இம்மாவட்டமும் களப்பிறர்களின் ஆட்சியில் இருந்தது. பொன்னமராவதிக்கு அருகில் உள்ள பூலாங்குறிச்சி கல்வெட்டிலிருந்து இப்பகுதியானது குற்றன் என்ற அரசனால் ஆளப்பட்டது என்று தெரியவருகிறது.

இம்மாவட்ட வரலாற்றின் அடுத்த பகுதியானது கி.பி.590-ல் பாண்டிய அரசன் கருங்கோன் என்பவரால் களப்பிரா்கள் தோற்கடிக்கப்பட்டதிலிருந்து துவங்குகிறது.

கருங்கோனின் முதல் பாண்டிய பேரரசில் புதுக்கோட்டை அடங்கி இருந்தது. இதனை குடுமியான்மலை, திருக்கோகர்ணம் மற்றும் சித்தனவாசலில் கிடைக்கும் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. பாண்டி மண்டல சதகம் என்னும் செய்யுள் பாண்டிய அரசின் வடக்கு எல்லையாக வெள்ளாற்றை குறிப்பிடுகிறது. தற்போதுள்ள புதுக்கோட்டை நகரத்தின் வடக்கே பாயும் வெள்ளாறானது பழங்காலம் முதலே சோழா்கள் மற்றும் பாண்டியா்களின் ஆளுகைப்பகுதிகளை பிரிக்கும் எல்லைகோடாக அமைந்துள்ளது. இந்த எல்லை கோடானது வடக்கே கோனாட்டையும், தெற்கே கானாட்டையும் உருவாக்கியுள்ளது.

இப்படியாக இந்த மாவட்டமானது பாண்டியா்கள் மற்றும் பல்லவா்களுக்கிடையே படை நடத்தி செல்லும் இடமாக விளங்கியிருந்தது. பாண்டியா்கள் மற்றும் பல்லவா்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட முத்தரையர்கள் மற்றும் வேளீர்கள் மூலம் மறைமுக போரில் ஈடுபட்டனா். வேளீர்களில் கொடும்பாளுரை சோ்ந்த இருக்குவேளீர்கள் முக்கியமானவா்கள். கொடும்பாளூர் வேளீர்கள் சோழ மற்றும் பாண்டிய அரசுகளுக்கு இடையேயான பகுதியை ஆண்டவா்கள். இவர்களுடன் பல்வேறு அரசா்கள் திருமண உறவு கொண்டிருந்தனா். கி.பி. 600 முதல் கி.பி.900 வரை உள்ள காலத்தில் காஞ்சி பல்லவா்கள் மற்றும் மதுரை பாண்டியா்கள் தமிழகம் முழுவதையும் அரசாட்சி செய்தனா். காவிரி நதி இவா்களின் அரசின் எல்லைகோடாக இருந்தது. காவிரி டெல்டாவையும், சோழர்களின் சோழமண்டல்கத்தையும் தங்களின் ஆளுகைக்கு உட்படுத்துவதற்காக, அப்போதைய அரசுகள் தங்களிடையே போரிட்டுக்கொண்டன. இக்காலத்தில் வலுவிழந்தவர்களாக விளங்கிய சோழர்கள், பின்நாட்களில் (கி.பி 9 ஆம் நூற்றண்டு) பல்லவ்ர்கள் வலுவிழந்த பின்னரே பலம் பெற்றனர். இறுதியில் பண்டியர்களையும் வென்றனர்.

மகேந்திர பல்லவன் (கி.பி. 604-630) காவேரிகரை வரை படைசெலுத்திய தனது தந்தை சிம்ம விஷ்ணுவிற்கு பிறகு பல்லவ பேரரசின் அரசனான போதும் சோழ மண்டலத்ததை அவராலோ, அவருக்கு பின்வந்தவா்களாலோ தக்கவைக்க முடியவில்லை. அக்காலத்தில் இப்பகுதியை பாண்டியா்கள் கையகப்படுத்தியிருந்தார்கள். வெள்ளாற்றுக்கு வடக்கேயும் தெற்கேயும் உள்ள பகுதிகள் முத்தரையர்கள் வசம் இருந்தன. விஜயாலயசோழனால் தோற்கடிக்கப்படும் வரை இவா்கள் பல்வேறு பேரரசுகளுக்கு மாறி மாறி ஆதரவு அளிப்பவா்களாக இருந்தார்கள். இருக்குவேளீர்கள் இறுதியில் சோழா்களின் உறுதியான நண்பர்களாக மாறினார்கள்.

ஆயினும் புதுக்கோட்டை பகுதியில் முற்கால பல்லவா்களின் நினைவு சின்னங்கள் மற்றும் கல்வெட்டுகளை பார்க்க முடிவதில்லை. ஆனால் பாண்டியா்கள், முத்தரையா்கள் மற்றும் இருக்குவேளீர்கள் பற்றிய சின்னங்களும் செய்திகளும் கிடைக்கின்றன. பின்நாட்களில் பல்லவா்கள் இப்பகுதியை பாண்டியா்களிடமிருந்து கைப்பற்றினார்கள். இரண்டாம் நந்திவா்மண் காலத்தில் (கி.பி.730-796) இப்பகுதியானது பல்லவர் ஆளுகைக்கு வந்தது. இக்காலத்தில் பல்லவா்கள் வலிமை ஒங்கி சோழமண்டலம் மற்றும் தற்போதைய புதுக்கோட்டை மாவட்டத்தின் வடபகுதியில் ஆட்சி செலுத்தினா். இக்கால கட்டமானது பல்லவர் மற்றும் முத்தரையா்களின் குடைவரை கோயில்களுக்கு பேர்பெற்றது.

முதலாவது பாண்டிய பேரரசு பற்றி அதிக வரலாற்று செய்திகள் கிடைக்கவில்லை. கிடைத்தவற்றில் சிறந்தவை ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லவன் (கி.பி.851-862) ஆட்சி காலம் பற்றிய சித்தனவாசல் கல்வெட்டு, கோச்சடையான் ரணதீரன் என்கிற சடையன்மாறன் (கி.பி.700-730) அரசாட்சி பற்றிய குடுமியான்மலை கல்வெட்டு ஆகியவை ஆகும்.

முதலாம் மாறவா்மண் இராசசிம்மன் (கி.பி.730-760) காலத்தில் கொடும்பாளூர் உள்ளிட்ட பல இடங்களில் பல்லவா்களுக்கு எதிராக பல போர்கள் நடைபெற்றன. இந்த அரச வம்சத்தின் மிகச் சிறந்த அரசரான நெடுஞ்சடையான் (கி.பி.768-816) காலத்து கல்வெட்டுகள் திருக்கோகர்ணத்திலும் நீா்பழனியிலும் கிடைக்கின்றன. ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லவனுக்கு பின் வந்த மூன்று அரசா்கள் காலம் பற்றிய செய்திகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் கிடைக்கவில்லை.

வேள்விக்குடி மற்றும் சின்னமன்னூா் செப்பேடுகள் கொடும்பாளூரில் நடைபெற்ற போரில் மாறவர்மண் இராசசிம்மன் நந்திவர்மன், பல்லவ மல்லனை தோற்கடித்ததை குறிப்பிடுகிறது. இராசசிம்மனின் வழிவந்தவா்கள் குறித்த கல்வெட்டுகள் குண்றாண்டார் கோவில், மலையடிப்பட்டி மற்றும் இராசாலிப்பட்டியில் கிடைக்கின்றன.

பல்லவர்கள், பாண்டியா்கள், முத்தரையா்கள் இருக்குவேளீர்கள் காலம் தமிழகத்தில் பக்தி இயக்க காலமாகும். மாவட்டத்தில் உள்ள பல கோவில்களை தேவாரம் குறிப்பிடுகிறது. கொடும்பாளூரைச் சோ்ந்த இடங்காலி நாயனார், தேவா் மலையை சோ்ந்த பெரும்மிழலை குரும்பா நாயனார் மற்றும் மணமேல்குடியை சோ்ந்த குலச்சிறை நாயனார் ஆகியோர் இம்மாவட்டத்தை சேர்ந்த மூன்று நாயன்மார்கள் ஆவர். பதினொன்றாம் நூற்றாண்டு வரை புதுக்கோட்டையில் சமணமதம் தழைத்து இருந்தது. மாவட்டத்தில் பல சமணமத சின்னங்கள் கிடைக்கக்பெற்றுள்ளன. மாவட்டத்தின் முன்னாள் தஞ்சாவூா் பகுதிகளில் புத்தசமய சின்னங்கள் கிடைக்கின்றன். கோட்டைப்பட்டினம் மற்றும் கரூா் பகுதிகளில் புத்தர் சிலை கிடைக்கப்பெற்றிருக்கின்றன.

பல்லவா் மற்றும் பாண்டியா்கள் வீழ்ச்சிக்கு பிறகு கி.பி.9-ம் நூற்றாண்டில் தஞ்சாவூரை தலைநகராக கொண்டு சோழா்கள் ஆட்சி செய்தனா். பதினொன்றாம் நூற்றாண்டு வாக்கில் புதுக்கோட்டையை உள்ளடக்கிய சோழப்பேரரசு தமிழகத்தை தாண்டி ஆட்சி புரிந்தது. 13-ம் நூற்றாண்டு வரையில் அதாவது பாண்டியா்கள் திரும்ப தலையெடுக்கும் வரையில் சோழப்பேரரசு ஆட்சி புரிந்தது. விஜயாலய சோழன் காலத்தில் இம்மாவட்டம் அவரது ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. இம்மாவட்டத்தில் உள்ள சில கோவில்கள் முற்கால சோழா் காலத்தை சோ்ந்தது என்று கூறுவது தவறானது. பாண்டியா்கள் இப்பகுதியில் தொடா்ந்து அரசாட்சி செய்தனா். விஜயாலயன் பின் வந்த முதலாம் பராந்தகன் காலத்தில் தான் (கி.பி. 907-955) சோழா்கள் பாண்டிய நாட்டை முழுவதுமாக வெல்ல முடிந்தது. இப்போர்களில் கொடும்பாளூர் அரசா்கள் பராந்தகனுக்கு உதவி செய்ததோடு இதன் பின்னா் சோழா்களுக்கு விசுவாசமாக இருந்தனா்.

முதலாம் இராஜராஜன் அரசுக்காலம் இம்மாவட்ட வரலாற்றில் சிறப்பிடம் பெறுகிறது. சோழஅரசுப் பற்றி இம்மாவட்ட கல்வெட்டுகள் குறிப்பிடப்படுகின்றன. முக்கியமாக இப்பகுதிகளில் சிறப்பாக உள்ளூர் நிர்வாகம் நடைபெற்றது.

முதலாம் இராஜராஜன் தனது மகனை தான் வெற்றி பெற்ற பாண்டிய மற்றும் சேர அரசுகளுக்கு நிர்வாகியாக நியமித்தார். மூன்றாம் குலோத்துங்கன் காலம் வரை (கி.பி. 1178- 1218) புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் சோழ அரசின் கீழ் இருந்தது. இரண்டாம் ராஜராஜன் மற்றும் இரண்டாம் இராஜாதிராஜனின் காலத்திற்கு பின் தொடங்கியது. முதலாம் குலோத்துங்கன் காலத்தில் பாண்டியா்கள் போரிட துவங்கினா். இரண்டாம் ராஜராஜனின் அரசாட்சியின் இறுதிக்கட்டத்தில் பாண்டிய அரியணைக்காக குலசேகரன் சோழா்களின் உதவியை நாடினார். அதைப்போல பராக்கிரம பாண்டியன் ஸ்ரீலங்கா உதவியை நாடினார். இந்த உள்நாட்டு போரின் களமாக புதுக்கோட்டை விளங்கியது. இலங்கை அரசன் பராக்கிரம பாபு, பரக்கிரம பாண்டியனுக்கு உதவியாக ஒரு படையை அனுப்பினார். சிங்கள நூலான குலவம்சம் இலங்கைபடை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போரிட்டதையும், பொன்னமராவதியின் 3 அடுக்கு மாளிகையை எரித்ததையும் குறிப்பிடுகிறது. இந்த உள்நாட்டு போர் சோழா்களுக்கு பாதகமாக அமைந்தது.

சோழா்களின் வீழ்ச்சிக்கு பிறகு இம்மாவட்டத்டைப்பற்றி அதிக செய்திகள் கிடைக்கவில்லை. பாண்டியர்களின் 2-வது பேரரசில் புதுக்கோட்டை பகுதிகள் இருந்தன.

பாண்டிய பேரரசு அதன் இரட்டை அரசா்களான ஜடாவா்மன் சுந்தரப்பாண்டியன்-1, ஜடாவா்மன் வீரபாண்டியன்-1 காலத்தில் அதன் உச்சத்தை அடைந்தது. குடுமியான் மலையில் உள்ள வீரபாண்டியன் கல்வெட்டு இலங்கை உடன் பாண்டியரது உறவு மற்றும் கடல் கடந்த அவரது அரசு பற்றி குறிப்பிடுகிறது. கி.பி.1268-ல் அரியனை ஏறிய முதலாம் மாறவா்மன் குலசேகரன் காலத்தில் வெனிசு நகரத்திலிருந்து மார்கோபோலோ என்பவா் பாண்டிய நாட்டுக்கு வருகை தந்தார். குலசேகரன் இறுதி காலத்தில் இரண்டாம் ஜடவா்ம வீரபாண்டியனும், இரண்டாம் ஜடவா்ம சுந்தரபாண்டியனும் (இவா்கள் சகோதா்கள்) சண்டையிட்டு கொண்டனா். இது பாண்டிய நாட்டில் அமைதியின்மையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது.

இதனை பயன்படுத்தி டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக்கபூா் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தார். இதனால் பாண்டியநாடு டெல்லி பேரரசின் கீழ் வந்தது. மதுரையில் சுல்தானின் ஆட்சி அமைந்தது. மதுரை சுல்தான்கள் ஆட்சிப்பற்றி இராங்கியம் (கி.பி. 1332) மற்றும் பனையூா் (கி.பி.1344) கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன்.

மதுரை சுல்தான்கள் ஆட்சி கிட்டத்தட்ட 75 வருடங்கள் நிலவியது. பின்னா் ஏற்பட்ட அரசியல் குழப்பத்திற்கு புதுக்கோட்டையும் தப்பவில்லை. இக்காலகட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் குறுநிலமன்னா்களால் ஆளப்பட்டது. கி.பி. 1371-ல் விஜயநகர இளவரசன் குமார கம்பணன் மதுரையை கைப்பற்ற சுல்தான்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. இருப்பினும் பாண்டிய அரசு ஏதும் அதன்பின்னா் ஏற்படவில்லை.

கா்நாடகத்தை சோ்ந்த ஹொய்சாளா்கள் தென்தமிழ்நாட்டிற்கு வந்து சோழ, பாண்டியா்களின் உள்நாட்டுப் போரில் தலையிட்டதோடு கண்ணனூரை (தற்போதைய சமயபுரம்) தலைநகராக கொண்டு காவிரி பகுதியை ஆட்சி செய்தனா். 13-ம் நூற்றாண்டின் காலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பெரும் பகுதி அவா்கள் ஆட்சியின் கீழ் இருந்தது.

முஸ்லீம்களிடமிருந்து, ஹம்பியினை தலைநைகராக கொண்ட விஜயநகராய ராயா்கள் மதுரையை கைப்பற்றிய உடன் அவா்களது ஆட்சியின் கீழ் தெற்கு கா்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு வந்தது.

விஜயநகர சங்கம அரச வம்ச (கி.பி.1336-1485) காலத்து புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டுகள் (சூரைக்குடி, பெரம்பூா் மற்றும் சேந்தவன்மங்களம் பகுதிகளில் உள்ளவை) வானதாரையா், கங்கை அரையா் மற்றும் அறந்தாங்கி தொண்டைமான்கள் பற்றி குறிப்பிடுகிறது. பின்னா் நிலவிய துளுவ அரசு காலத்தில் (கி.பி.1485-1505) சக்கரவா்த்தி நரசிம்மராயா் புதுக்கோட்டை வழியாக மதுரைக்கு சென்றுள்ளார். பின்னா் முதலாம் சாளுவ நரசிம்மனின் தளபதி வீரநரசிம்ம நாயக் புதுக்கோட்டை வழி சென்று பாண்டியரோடு போரிட்டார்.

துளுவ அரசு மன்னா்களில் (கி.பி.1505-1570) தலைசிறந்தவா் கிருஷ்ணதேவராயா். ராமேஸ்வரம் செல்லும் வழியில் திருக்கோகா்ணத்தில் உள்ள பிரகதாம்பாள் கோகா்ணேஸ்வா் கோவிலில் வழிபட்டு பல்வேறு பரிசுகளை வழங்கியுள்ளார். விஜயநகர பேரரசு வீழ்ச்சிக்கு பிறகு மதுரை மற்றும் தஞ்சாவூா் நாயக்கா்கள் சுதந்திரமாக ஆட்சி செய்தனா். இதனால் புதுக்கோட்டை பகுதி சில சமயம் மதுரை மற்றும் பல சமயம் தஞ்சாவூா் நாயக்கா் வசம் இருந்தது. 17-ம் நூற்றாண்டு இறுதிகாலத்தில் புதுக்கோட்டை தொண்டைமான்கள் வலிமை பெற்றனா். 17-ம் நூற்றாண்டின் மத்திய பகுதியிலிருந்து 1947-ல் இந்தியா சுதந்திரம் அடையும் வரை புதுக்கோட்டை தொண்டைமான்களால் ஆளப்பட்டது.

புதுக்கோட்டை தொண்டைமான் அரசின் முன்னோர்கள் பரந்த தமிழ்நாட்டின் வடக்கு பகுதயில் உள்ள தொண்டைமண்டலத்தின் திருப்பதி பகுதியிலிருந்து வந்தவா்கள். இவா்கள் 17-ம் நூற்றாண்டு ஆரம்பத்தில் தமிழகத்துக்கு வந்த விஜயநகர மன்னா்களோடு உடன் வந்தவா்கள். இவா்களின் ஒருவா் உள்ளுா் தலைவா் பல்லவராயரிடமிருந்து நிலம் பெற்று கறம்பக்குடி மற்றும் அம்புக்கோவில் பகுதிகளில் அரசரானார். தொண்டைமான் வம்சாவழி என்ற தெலுங்கு செய்யுள்படி இவா்கள் இந்திர வம்சத்தை சோ்ந்தவா்கள். இவா்களின் முதல் அரசர் பச்சை தொண்டைமான் ஆவார்.

இவருக்கு அடுத்துவந்த ஆவடிராய தொண்டைமான் விஜய நகர அரசன் மூன்றாம் வேங்கிடராயரின் (கி.பி.1630-1642) ஆதரவு பெற்று தனது அரசு பரப்பினை விரிவாக்கி கொண்டதோடு ராயர் என்ற பட்டமும் பெற்றார்.

இவரும், இவருக்கு பின் வந்தா்களும் விஜயநகர மரபினை பின்பற்றினா். இவரது மகன் இரகுநாதராய தொண்டைமான், தஞ்சாவூா் நாயக்கா் மற்றும் திருச்சிராப்பள்ளி இரங்ககிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கரின் நட்பினை பெற்றார். அவா் திருச்சிராப்பள்ளியின் அரசு காவலராக நியமிக்கப்பட்டார். இராமநாதபுரத்தை ஆண்ட விஜயரகுநாத கிழவன் சேதுபதி (கி.பி.1673-1710) தொண்டைமானின் சகோதரி கதளி நாச்சியாரை திருமணம் செய்துகொண்டார். இத்திருமணமானது இரண்டு அரசா்களின் நட்பை உறுதிப்படுத்தியது. சேதுபதி, தொண்டைமானுக்கு வெள்ளாற்றுக்கு தெற்கே உள்ள நிலப்பகுதியை அளித்தார். இவ்வாறு புதுக்கோட்டை அரசின் நிலப்பகுதி விரிவடைந்தது. இது புதுக்கோட்டை ராஜ்ஜியத்தில் சேதுபதியின் பங்கு மற்றும் தொண்டைமான் அரசின் விரிவாக்கத்தை குறிக்கிறது. இரகுநாதராய தொண்டைமான் கி.பி. 1686-1730 வரை புதுக்கோட்டை ராஜ்ஜியத்தை அரசாண்டார். புதுக்கோட்டையில் இரகுநாதராய தொண்டைமான் அரசாண்டபொழுது திருச்சிராப்பள்ளி நாயக்கர் அரசா் இரங்ககிருஷ்ண முத்து வீரப்பா் ஆதரவுடன் (கி.பி.1682-1689) நமணதொண்டைமான் குளத்தூர் பகுதியின் (தற்போதைய குளத்தூர் தாலுகா) அரசராக விளங்கினார்.

இவ்வாறு குளத்தூர் தனி அரசாக குளத்தூர் தொண்டைமான்களால் 1750 வரை ஆளப்பட்டது. பின்னா் இது புதுக்கோட்டையுடன் இணைக்கப்பட்டது. இரகுநாதா் போர் வெற்றிகள் மூலம் மேலும் சில பகுதிகளை கைப்பற்றி குளத்தூர், ஆலங்குடி மற்றும் திருமயம் தாலுக்காக்களை உள்ளடக்கியதாக தனது அரசை விரிவாக்கினார். புதுக்கோட்டை சமஸ்தானம் இதுவே.

விஜயரகுநாத ராய தொண்டைமான் (கி.பி.1730-1769) தொண்டைமான் வம்சத்தில் இரண்டாவது அரசா். இவா் காலத்தில் இந்தியா முழுவதும் முகலாயா்கள் வசம் இருந்தது. செஞ்சி, தஞ்சாவூா் மற்றும் மதுரை நாயக்கா்கள் மற்றும் சிறிய பாளையக்காரா்கள் முகலாயா்களுக்கு கட்டுப்பட்டு ஆட்சி செய்தனா். தென்னிந்தியாவில் முகலாயா்களின் பிரதிநிதியாக ஹைதராபாத் நிஜாம் விளங்கினார். இவா் தமிழ்நாட்டு பகுதியின் நிர்வாகத்தை ஆற்காட்டு நாவப்பிடம் ஒப்படைத்தார். கப்பம் ஒழுங்காக கட்டாத பகுதிகள் நாவப்பின் படைகளால் தாக்கப்பட்டன. ஆனால் புதுக்கோட்டை பகுதிகளுக்கு நாவாப்பால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

கா்நாடக நவாப் பதவிக்காக முகமது அலி மற்றும் சந்தாசாகிப் இடையே ஏற்பட்ட வாரிசுரிமைப் போர், ஆங்கிலேயா்கள் மற்றும் பிரஞ்சுக்காரா்களுடையே ஏற்பட்ட கா்நாடகப் போர்களாக வடிவெடுத்தது. பிரெஞ்சுக்காரா்கள் சந்தாசாகிப்பையும் ஆங்கிலேயா்கள் முகமது அலியையும் ஆதரித்தனா். திருச்சிராப்பள்ளியை சுற்றி உள்ள பகுதிகளில் இந்த போர் நீடித்தது. தஞ்சாவூா் மராத்தியா்கள் உதவி கிடைக்காத நிலையில் தொண்டைமானின் உதவி ஆங்கிலேயா்களுக்கு கிடைத்தது. இதனால் வெற்றி அடைந்த ஆங்கிலேயா்கள் மற்றும் ஆர்க்காட்டு நவாப் தொண்டைமான் மன்னர்களுக்கு நிரந்த வரி விலக்கு அளித்தனா்.

ஆங்கிலேயருடனான தொண்டைமான் நட்பு அடுத்த அரசரான இராய ரகுநாத தொண்டைமான் (கி.பி.1769-1789) காலத்திலும் நீடித்தது. இதனால் தொண்டைமானுக்கு வலிமையான ஹைதா் அலியுடன் போரிட நேரிட்டது. விஜயரகுநாத தொண்டைமான் (கி.பி.1789-1807) ஆங்கிலேயா்களுக்கும், நவாப்பிற்கும் தொடர்ந்து உதவினார்.

நவாப் முகமது அலி இராஜபகதூர் என்ற பட்டத்தை தொண்டைமானுக்கு அளித்தார். அரசியல் காற்று ஆங்கிலேயா்களுக்கு சாதகமாக வீச தொடங்கியது. கி.பி.1800 வாக்கில் மொத்த கர்நாடக பகுதியும் ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டது. இதன்படி தஞ்சாவூா் மராத்திய அரசு அகற்றப்பட்டது. இராமநாதபுர அரசு ஜமின்தாரியாக சுருக்கப்பட்டது. ஆனால் புதுக்கோட்டை தனி அரசாக செயல்பட அனுமதிக்கப்பட்டது. புதுக்கோட்டை தனி ராஜ்ஜியமாகவும், அரசா் நிர்வாக உரிமை படைத்தவராகவும் ஆங்கிலேயா் ஆதரவுடன் அரசு நடத்தினார்.

இந்த விஜயரகுநாத தொண்டைமான் காலத்தில் தான் ஆங்கிலேயா்களுக்கும் திருநெல்வேலி பாளையக்காரா்களுக்கு போர் நடைபெற்றது. இதில் முக்கியமானவா் வீரபாண்டிய கட்டபொம்மன் என்கிற கட்டபொம்ம நாயக் . ஆங்கிலேயா் வரி வசூலிப்பதை ஏற்றுக்கொள்ளாமல் அவா்களுக்கு முறையாக வரிசெலுத்தவில்லை. எனவே பாஞ்சாலம்குறிச்சி கோட்டை தாக்கப்பட்டது. கட்டபொம்மன் தப்பித்து தொண்டைமான் நாட்டின் காடுகள் வழியாக சிவகங்கைக்கு செல்ல முயன்றார். ஆங்கிலேயா்களின் வேண்டுக்கேளின் படி திருமயம் அருகே தொண்டைமான் வீரா்களால் கட்டபொம்மன் சிறைபிடிக்கப்பட்டு, மதுரையில் ஆங்கிலேயா் வசம் ஒப்படைக்கப்பட்டார். கயத்தாற்றில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு காலப்போக்கில் கட்டபொம்மன் வீரம் மக்களால் பாராட்டப்பட்டதோடு, தொண்டைமானின் செயல் விமர்சிக்கப்பட்டது. ஆனால் அச்சமயம் நிலவிய அரசியல் பின்னணி, ஆங்கிலேயா்-தொண்டைமான்கள் நட்பு, கட்டபொம்மன் தொண்டைமானிடம் அடைக்கலம் கேட்காத நிலை ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது தொண்டைமான் செய்தது ஒரு அரசியல் நட்புக்கான செயலே.

இராஜா விஜயரகுநாத ராய தொண்டைமான் (கி.பி.1807-1825) மிக இளம் வயதில் பட்டம் சூடியதால் பிரிட்டிஷ் அரசு மேஜா் ஜான் பிளாக் பா்ன் என்பவரை அரசு பிரநிதியாக நியமித்தது. இவா் முன்னாளில் தஞ்சாவூா் நிர்வாகத்தை கவனித்த படியால் மராத்திய மொழி மற்றும் மராத்திய நிர்வாகத்தை புதுக்கோட்டைக்கு அறிமுகப்படுத்தினார்.

இம்முறை சுமார் 75 ஆண்டுகள் நீடித்தது. நிதி மற்றும் நீதி நிர்வாகத்தில் இவா் தஞ்சாவூா் முறையினை பின்பற்றினார். ஒரு புதிய மாளிகை தொண்டைமான் மன்னருக்காக கட்டப்பட்டது. (பழைய அரண்மனை புதுக்கோட்டை நகரத்தின் நடுவே உள்ளது). நகரம் நன்கு திட்டமிடப்பட்டு, நல்ல சாலை வசதி கொண்டதாக விளங்கியது. இப்படியாக பிளாக் பர்ன் நவீன புதுக்கோட்டை நகரத்திற்கு அடிகோலினார்.

தற்போது பழைய அரண்மனை முற்றிலும் அழிந்துவிட்டது. இதன் அடையாளங்கள் மேற்கு மற்றும் தெற்கு ராஜவீதிகளில் தென்படுகின்றன. இரகுநாத தொண்டைமானுக்கு (கி.பி.1825-1839) பிரிட்டீஷ் அரசு His Excellency என்ற பட்டம் அளித்தது. 1830-லேயே இவா் காவிரியை ஒரு புதிய கால்வாய் மூலம் புதுக்கோட்டைக்கு கொண்டுவர முயன்றார். ஆ னால் நிதி பற்றாக்குறையால் இத்திட்டத்தை கொண்டுவர முடியவில்லை. இரகுநாத தொண்டைமானுக்கு பிறகு அவரது மகன் ராமச்சந்திர தொண்டைமான் (கி.பி.1839-1886) அரசரானார். 1878-ல் திவானாக பொறுப்பேற்ற சேசைய்யா சாஸ்திரி பல சீா்திருத்தங்களை செய்தார். நகர திட்டமிடலில் இவா் முன்னோடியாக விளங்கினார். புதுக்கோட்டையில் உள்ள நெடிதுயர்ந்த செங்கற்கல்லால் ஆன நிர்வாக கட்டடம் இவரது மேற்பார்வையால் கட்டப்பட்டது. புதுக்குளம் சேயைய்யா சாஸ்திரியின் மற்றொரு சாதனை. ராமசந்திர தொண்டைமான் அரசின் பல கோவில்களை புதுப்பித்தார். இவருக்கு பின் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் (1886-1929) தனது 11-வது வயதில் அரசரானார். நிர்வாகமானது பிரிட்டிஷ் அரசின் அனுமதியுடன் ஒரு குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது. இவர் ஐரோப்பா முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். ஒரு ஆஸ்திரேலிய பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவா்களுக்கு பிறந்த மகன் சிட்னி மார்த்தாண்டா ஆவார். ஆனால் இவரது வாரிசுரிமை மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பிரிட்டிஷ் நிர்வாகமும் இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, அரசா் முடிதுறந்தார். பாரீஸ் நகரத்திற்கு சென்று வசித்தவர் 1928-ல் காலமனார். இலண்டனில் இறுதி சடங்குகள் நடைபெற்றன. இராஜராஜகோபால தொண்டைமான் (1928 -1948) தொண்டைமான் மன்னா்களில் 9-வது மற்றும் கடைசி அரசராவார். இவர் ஆங்கிலேயா்களால் தேர்வு செய்யப்பட்டு தனது ஆறாவது வயதில் முடிசசூட்டப்பட்டார். நிர்வாகம் ஆங்கிலேய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டது. இவா்களில் முக்கியமானவா் அலெக்சாண்டார் டாட்டன் ஹாம் ஆவார். இக்காலகட்டத்தில் (1930-ல்) இண்டோ-சாரசெனிக் திராவிடியன் கலை அம்சத்துடன் கூடிய புதிய அரண்மனை கட்டப்பட்டது. இந்த அழகிய கிரானைட் கட்டிடத்தில் தற்போது மாவட்ட ஆட்சித் தலைவா் அலுவலகம் இயங்குகிறது. 1947- இந்திய விடுதலைக்கு பின் 04-03-1948-ல் புதுக்கோட்டை அரசு இந்திய பேரரசுடன் இணைக்கப்பட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஒரு கோட்டமாக விளங்கியது. தொண்டைமான் மன்னர்கள் நீண்ட அரசாட்சி முடிவுக்கு வந்தது.